Saturday, 10 August 2013

சாவித்திரி கதை


           அஸ்வபதி என்ற மன்னனுடைய மகள் சாவித்திரி. இவள் ஒருமுறை காட்டிற்கு சென்றபோது அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்தாள். அவன் மீது சாவித்திரிக்கு காதல் ஏற்பட்டது. அதே போன்றுதான் சத்தியவானுக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் உயிராக காதலித்து வந்தனர். 
இதுபற்றி தனது தந்தையிடம் கூறி விரைவில் சத்தியவானை திருமணம் செய்ய எண்ணினாள் சாவித்திரி. அவளது எண்ணத்தை நாட்டுக்கு திரும்பியதும், தனது தந்தை அஸ்வபதியிடம் தெரிவித்தாள். 'தந்தையே! நான் காட்டில் சத்தியவான் என்ற இளைஞரை சந்தித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள என் மனம் விரும்புகிறது' என்று கூறினாள்.
 அற்ப ஆயுள் உள்ளவன்............ மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சத்தியவான் யார் என்பது பற்றி அஸ்வபதி விசாரிக்க தொடங்கினார். அப்போது, சத்தியவான் ஒரு அரசகுமாரன் என்பதும், ஆனால் அவனுக்கு அற்ப ஆயுள் என்பதும் நாரத முனிவர் மூலமாக அஸ்வபதி அறிந்து கொண்டார். 

மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை என்றாலும், அற்ப ஆயுள் உள்ளவனுக்கு மகளை கொடுத்து, தெரிந்தே அவளது வாழ்க்கையை அளிக்க அன்புள்ள தந்தையால் எப்படி முடியும். ஆகவே, சாவித்திரியிடம் இதுபற்றி கூறி 'சத்தியவானை திருமணம் செய்து கொள்ள வேண்டாம்' என்றுகூறினார். 

ஆனால் மகள் பிடிவாதமாக இருந்தாள். இறுதியில் சாவித்திரியின் பிடிவாதமே வென்றது. சத்தியவா னுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் நடைபெற்றது. 
உயிரைப் பறித்த எமன்.......... ஒரு முறை காட்டில் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தான் சத்தியவான். அன்றைய தினம் காரடையான் நோன்பு நாள். அந்த நாளே சத்தியவானின் இறுதிநாளாகவும் இருந்தது. அந்த சமயத்தில் எமன் அங்கு வந்து தனது பாசக்கயிற்றை வீசி சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு சென்றான். 

யார் கண்ணுக்கும் புலப்படாத எம தர்மன், உத்தமியான சாவித்திரியின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை. சத்தியவானின் உயிரை பறித்துச் சென்று கொண்டிருந்த எமனை, பின் தொடர்ந்தாள் சாவித்திரி. ஒரு பெண் தன்னை தொடர்வதை கண்டு சற்று அதிர்ச்சியுற்ற எமன், 'உனக்கு என்ன வேண்டும் கேள்! அதை விடுத்து என் பின்னால் வந்து என்னை தொந்தரவு செய்யாதே!' என்றார். 

வரத்தால் உயிர் மீட்பு............ அதற்கு சாவித்திரி, 'எனக்கு பிறக்கின்ற நூறு குழந்தைகளையும், தன் மடியில் வைத்துக் கொண்டு என் மாமனார் கொஞ்ச வேண்டும்' என்று வரம் கேட்டாள். சற்றும் யோசிக்காத எமதர்மன், 'அப்படியே ஆகட்டும்' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவரை மீண்டும் வழிமறித்த சாவித்திரி, 'நீங்கள் அளித்த வரம் உண்மையானால், என் கணவரின் உயிரை திருப்பி தாருங்கள்' என்றாள். 

அப்போதுதான், தான் செய்து விட்ட தவறின் பிழை புரிந்தது எமதர்மனுக்கு. கொடுத்த வரத்தை மீற முடியாமல் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார் எமதர்மன். 

No comments:

Post a Comment