Monday, 16 December 2013

பொதிகை மலை உருகிய கதை

இலங்கை வேந்தன் ராவணனுக்கு ஓர் ஆசை.தேவர்கள் எனக்கு அடங்கி பயந்து நடக்கிறார்கள். பல அரக்கர்களை நான் வென்றிருக்கிறேன். என்றாலும் அருகில் உள்ள தமிழகம் மட்டும் என் ஆளுகைக்குள் வராமல் உள்ளது. எனவே தமிழகத்தை வென்று அதை நம் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆசை.உடனே அவன் தன் புஷ்பக விமானத்தில் தன்னுடைய சகாக்களுடன் பொதிகை மலைக்கு வந்தான். அங்கே அகத்திய முனிவரைச் சந்தித்தான். ராவணனின் நோக்கம் அகத்தியருக்குப் புரிந்துவிட்டது. தவவலிமையால் ஒப்புயர்வற்ற சிவபெருமானிடமிருந்து ஒப்பற்ற தமிழ்மொழியைப் பெற்ற அகத்திய முனிவருக்கு வணக்கம், என்றான் பணிவுடன். சிவனைக்குறித்து பலவகையான தவங்கள் இயற்றி, அதன் பயனாய் மூன்று கோடி வருடம் ஆயுளைப்பெற்ற ராவணன் என் இருப்பிடத்திற்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். வா! வா! என்று வரவேற்றார் அகத்தியர். ராவணன் தன் வருகையின் உள்நோக்கத்தை தானே வெளிப்படையாகச் சொல்லும்படி செய்தார் அகத்தியர்.  ராவணா! இலங்கையில் இருக்க வேண்டிய நீ தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதன் நோக்கம் என்னவோ? என்று கேட்டார் அகத்தியர்.முனிவர் பெருமானே! தமிழகத்தை என் ஆட்சிக்கு உட்படுத்த எண்ணியிருக்கிறேன். அதன்பொருட்டு நிலைமையை ஆராய வந்துள்ளேன் என்றான் ராவணன். ராவணா! நீ யாழ் இசைப்பதில் வல்லவன் அல்லவா? என்று கேட்டார் அகத்தியர். ஆம். பெரும் வல்லவன். அதிலென்ன சந்தேகம்? என்று ஆணவத்துடன் பதில் சொன்னான். அப்படியானால் நீ முதலில் என்னை யாழ் இசையில் வெல்ல வேண்டும். என்னை ஜெயித்தால் மட்டுமே, தமிழகத்தை வெற்றி கொள்ள நினைக்கும் உன் எண்ணம் ஈடேறும். இல்லாவிட்டால் உன் ஆசை நிறைவேறாது என்றார் அகத்தியர். அப்படியே ஆகட்டும். யாழ் இசைப்பதில் உங்களிடம் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டுகிறேன், என்றான் ராவணன்.

மலையே கரைந்தது அகத்தியருக்கும், ராவணனுக்கும் யாழ் இசை போட்டி நடைபெறப் போகிறது என்ற செய்தி எங்கும் பரவியது. ராவணன் யாழ் மீட்பதில் வல்லவன் என்பது அகிலம் அறிந்த ஒன்று. ஆனால், அகத்தியருக்கு யாழ் வாசிக்கத் தெரியும் என்பது இப்போதுதான் மக்கள் கேள்விப்பட்டார்கள். இசைப்போட்டிக்குரிய மேடை அமைக்கப்பட்டது. போட்டியைக்காண மக்கள் குழுமியிருந்தார்கள். போட்டி ஆரம்பமாயிற்று.  ராவணா! முதலில் நீ வாசிக்கிறாயா? அல்லது நான் வாசிக்கட்டுமா? என்றார் அகத்தியர். ராவணனுக்குத் தன் திறமையில் அதீத நம்பிக்கை இருந்தது. அகத்தியர் தோற்கப்போவது என்னவோ உறுதி. அப்படியிருக்க அவர்தான் முதலில் வாசிக்கட்டுமே என்று மனதிற்குள் நினைத்தவாறு, முதலில் நீங்களே வாசியுங்கள். தங்களது வாசிப்பில் மயங்கி என் உள்ளம் உருகிவிட்டால், நீங்களே வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்ளலாம், என்றான். ராவணா! உன் உள்ளம் உருகுகிறதா இல்லையயா? என்பதை வெளியில் இருப்பவர்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? இதோ பார், அனைவரும் பார்க்கும்படி இந்த பொதிகை மலையையே சிவனின் அருளால் யாழ் மீட்டி உருக வைக்கிறேன் என்றார் அகத்தியர். அக்ததியர் யாழை மீட்டினார். அவர் யாழை வாசிக்க, வாசிக்க பொதிகை மலை உருகியது. இதைக்கண்ட எல்லோரும் திகைப்படைந்தார்கள். ராவணன் வியப்படைந்தான். கல்லும் கரையும் அளவிற்கு ராவணன் யாழ் இசையைப் பழகவில்லை. ஆகவே வெட்கித் தலைகுனிந்தான். முனிவர் பெருமானே! நான் தோற்றுவிட்டேன். இந்த நாட்டை வெற்றி கொள்வது எளிதல்ல என்பதற்கு தாங்களும், தங்கள் இசையும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியபடி தலைபணிந்து வணங்கினான். அவனது கர்வம் அடங்கியது.

No comments:

Post a Comment