Friday 12 September 2014

அமர்நீதி நாயனார்

பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய், மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும், மணியும், முத்தும், வைரமும், துகிலும், அவரது செல்வச் சிறப்பையும், வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டின. இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே, இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து, ஆடையும், அரைத் துண்டும், கோவணமும் அளித்து அளவிலா ஆனந்தம்  பெற்றார். பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்களுக்கு என்றே திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக் காலத்தில், அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார். சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பண்பினை - பக்திப் பெருக்கினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான்.
அந்தண பிரம்மச்சாரி போன்ற திருவுருவம் பூண்டு, அவர் தங்கியிருந்த மடத்திற்கு எழுந்தருளினார். அமர்நீதியார் அடியாரைப் பார்த்ததும் மகிழ்ச்சயோடு வரவேற்று தேவரீர் இம்மடத்திற்கு இப்போதுதான் முதல் தடவையாக வருகிறீர் என்று கருதுகிறேன். அடியார் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம்தான் என்னவோ ! என முகமன் கூறி வரவேற்றார். அவர் மொழிந்ததைக் கேட்டு எம்பெருமான், அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, கந்தை, கீவ், அழகிய வெண்மையான கோவணம் முதலியனவும் தருகின்றீர் என்று கேள்வியுற்றுத்தான் உம்மைப் பார்த்துவிட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைத்தார். அம்மையப்பரின் அருள் வாக்கு கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளங்குளிர, மடத்தில் அநதணர்களுக்காக வேதியர்களால் தனியாக அமுது செய்கின்றோம். அதனால் ஐயன் தயவு கூர்ந்து திருவமுது செய்து அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார். நன்று நன்று, உமது விருப்பத்தை யாம் உளமாற ஏற்கின்றோம். முதலில் யாம் காவிரியில் நீராடச் செல்ல இருக்கின்றோம். அதற்கு முன் ஒரு சிறு நிபந்தனை. என்ன சுவாமி ! ஒன்றும் இல்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் ஒருக்கால் மழை வந்தாலும் வரலாம். இக்கோவணம் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் கொடுத்து விட்டுப் போகிறேன்.
பாதுகாப்பாக வைத்திருந்து தரவேண்டும். இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர். இதன் பெருமையைப் பற்றி அப்படி, இப்படி என்று எடுத்து இயம்புவது அரிது. இவ்வாறு சொன்ன பெருமான், தண்டத்தில் இருந்த கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து, அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டு, நீராடி வரக் காவிரிக்குப் புறப்பட்டார். வேதியர் மொழிந்ததை மனதில் கொண்ட அமர்நீதியார் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்பாக வைத்தார். அடியார்களைச் சோதிப்பதையே தமது திருவிளையாட்டாகக் கொண்ட பெருமான், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது போல், இன்று இவ் வணிகரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார். அத்தோடு நிறுத்தவில்லை. தமது சோதனையை ! அன்று பகீரதனுக்காகக் கங்கையைப் பெருக விட்ட பெருமான் இன்று வணிகனைச் சோதிக்க திடீரென்று மழையையும் வரவழைத்தார். முதல்வோன், கங்கையில் தான் நீராடினாரோ, இல்லை காவிரியில்தான் நீராடினாரோ அல்லது நம் மாமனது திருவிடத்திலே பாய்ந்தோடும் வற்றாத வைகை நதியில்தான் நீராடினாரோ அவருக்குத்தான் வெளிச்சம் ! சற்று நேரத்திற்கெல்லாம் மழையில் நனைந்து கொண்டே, மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார், அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார். அடியார் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார், விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ளத் துணிதனைக் கொடுத்தார். இதெல்லாம் எதற்கு ? முதலில் நான் கொடுத்து கோவணத்தை எடுத்து வாரும், எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகிவிட்டது என்றார் இறைவன்.
அமர்நீதியார் கோவணத்தை எடுத்து வர உள்ளே சென்றார். வேதியரின் சூது மொழியை, அமர்நீதியார் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? இறைவனின் கொவ்வைச் செவ்வாய் இதழ்களிலே குமிழ்ச் சிரிப்பு சிறிது நேரம் நர்த்தனம் புரிந்தது. அமர்நீதியார் சென்று, கோவணத்தைத் தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு கோவணத்தைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார், பலனேதுமில்லை. அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய கோவணத்தை எடுத்துக்கொண்டு, வேதியர் முன் சென்று, வேதனை முகத்தில் தோன்ற, தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அந்தணரை நோக்கி, ஐயனே ! எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார். அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட செஞ்சடையான், என்ன சொல்கிறீர் ? எமக்கு ஒன்றுமே புரிய வில்லையே ! என்றார். ஐயனே ! தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோவணத்தைப் பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இதனை அணிந்துகொண்டு எம் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.
 அமர்நீதியாரின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், எம்பெருமானின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படிக் காணாமற் போகுமாம் ? நான் மகிமை பொருந்திய கோவணம் என்று சொன்னதால், அதனை நீரே எடுத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீரோ ? இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழுக்குகின்றீரோ ! கொள்ளை லாபம் கொழிக்க, நீர் நடத்தும் வஞ்சக வாணிபத்தைப்பற்றி இப்போது அல்லவா எனக்குப் புரிகிறது. உம்மை நம்பி நான் அல்லவா மோசம் போனேன் ! மதுரை மீனாட்சி அம்மன் கைப்பிடிக்க, வளையல் வியாபாரியாக வந்த சோமசுந்தரக் கடவுள் அமர்நீதியாரின் வாணிபத்தைப் பற்றி மேற்கண்டவாறு கடிந்து கூறினார். எம்பெருமான் மொழிந்ததைக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இவ்வெளியோன் வேண்டுமென்றே செய்யவில்லை. காணாமற் போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன். ஐயன் எங்ஙனமாகிலும் சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும். என்று பயபக்தியுடன் பிரார்த்தித்தார்.
பன்முறை மன்னிப்புக் கேட்டார். அடியாரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார், கல்லும் கரையக் கெஞ்சுவது கண்டு, சினம் சற்று தணிந்தாற்போல் பாவனை செய்த வேதியர், தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இது உம்மிடம் கொடுத்த கோவணத்தோடு கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கு எதற்கு என்று மொழிந்தார். இறைவனின் தீர்ப்பைக் கேட்டு அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து மறையவர் முன் நாட்டினார். அந்தணரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லை. அதுகண்டு அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. ஒவ்வொன்றாக மற்ற கோவணமனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை. அந்தணரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. அம்மாயத்தைக் கண்டு வியந்தார் அமர்நீதியார். இஃது உலகத்திலே இல்லாத பெரும் மாயையாக இருக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார்.
எவ்வளவுதான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், சிவனார் தட்டு தாழ்ந்தும் இருப்பதைப் பார்க்கும்போது, அமர்நீதியார் அடியார்களிடம் கொண்டுள்ள பக்தியும், அன்பும் உயர்ந்துள்ளது என்பதையும், அத்தகைய பக்திக்கு முன்னால் இறைவனின் சோதனைகூடச் சற்றுத் தாழ்ந்துதான் உள்ளது என்ற உண்மையை உணர்த்துவதுபோல் தோன்றியது. மடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார்தான் அறிய முடியும் ? வேதத்தையல்லவா ? ஈரேழு உலகமும் அதற்கு ஈடு இணையாகாதே ! அன்பர்களின் அன்பிற்குத் தானே அது கட்டுப்படும் ! இறைவனின் இத்தகைய மாய ஜால வித்தையை உணரச் சக்தியற்ற தொண்டர் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இனிமேல் எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்றுதான் ! அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார்.
ஐயனே ! எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நானும், என் மனைவியும், குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட, நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார். பிறவிப் பெருங்கடலில் நின்றும் தம் தொண்டனைக் கரையேற்றும் பொருட்டு தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுகாறும் பிழை ஏதும் புரியாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்றல் வேண்டும் என்று கூறினார். திருநல்லூர் பெருமானைப் பணிந்தார். நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும், மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். துலாக்கோலின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன. மூவரும் கண் திறந்தனர்.அதற்குள் முக்கண்ணன் மாயமாய் மறைந்தார். அந்தணரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார், அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் கற்ப பூக்களை மழைபோல் பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும், மனைவியாரும், மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் துலாத்தட்டு புட்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புட்பக விமானத்தில் கைலயங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.

Tuesday 11 March 2014

உலகம் போற்றும் ஸ்ரீஹர்ஷர்

வாழ்க்கையில் கஷ்டப்படாத மனிதர்களே இல்லை. அதிகக் கஷ்டப்படுவர்கள் காலையில் எழுந்ததும் நினைக்க வேண்டியது நள மகராஜாவை! இவனது சரித்திரத்தை சமஸ்கிருதத்தில் எழுதியவர் ஸ்ரீஹர்ஷர்.
இவரது தந்தை ஸ்ரீஹீரர் பெரும் புலவர். இவரது புலமையால் ஈர்க்கப்பட்ட மன்னர், தனது ஆஸ்தானப் புலவராக்கிக் கொண்டார். பொன்னும் பொருளும் தந்து ஆதரித்தார். ஸ்ரீஹீரரின் இல்லத்தரசி மாமல்லதேவி.
ஒருமுறை, வெளிநாட்டுப் புலவர் ஒருவர் மன்னனின் அரசவைக்கு வந்தார். ""மன்னா! நானே புலமையில் உயர்ந்தவன். 
என்னோடு போட்டி போடுவார் யாரும் இல்லை. உம்நாட்டில், என்னை வெற்றி கொள்ளும் புலவர் இருந்தால் போட்டிக்கு அனுப்புங்கள். இல்லையென்றால், எனக்கு ஒரு கோடி பொன்னைக் கொடுத்து உங்கள் தேசத்தில் புலமையே இல்லை என்று எழுதியும் தாருங்கள்,'' என்றார்.
மன்னன் சிரித்தான்.
""புலவரே! பெருமைப்படாதீரும். என் சமஸ்தானப் புலவர் ஸ்ரீஹீரரது புலமையின் சக்தி அறியாமல் பேசுகிறீர்! நாளை அவருடன் போட்டி,'' என சொல்லிவிட்டான்.
ஸ்ரீஹீரரும் தேசத்தின் பெருமையைக் காப்பாற்ற அந்தப் புலவருடன் போட்டியிட்டார். ஆனால், வெளிநாட்டுப் புலவரின் புலமையின் முன் அவரது புலமை எடுபடாமல் தோற்றுப்போனார். மன்னன் குனிந்த தலையுடன் ஒரு கோடி பொன்னை அளித்ததுடன், தங்கள் தேசத்தின் புலமையைத் தாழ்த்தி ஓலையும் கொடுக்க வேண்டியதாயிற்று.
வெட்கிப்போன ஸ்ரீஹீரர் வீட்டுக்குச் சென்றார். "தன் மானத்துடன் நாட்டின் மானத்தையும் இழக்கச் செய்து விட்டோமே' என்று வருந்தினார். மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் போல, அந்த வருத்தத்திலேயே இறந்து போனார்.
மாமல்லதேவி துடித்தாள். கணவன் இறந்தபின் வாழ விரும்பாத அவளும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த வேளையில், தன் மகனை என்ன செய்வதென்ற நிலை ஏற்பட்டது. அவளது தந்தை சிறுவயதில் அவளுக்கு "சிந்தாமணி" என்ற மந்திரத்தை உபதேசம் செய்திருந்தார்.
""மகளே! 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மந்திரத்தை ஜெபித்தாலோ, அல்லது ஒருநாள் இரவு முழுக்க ஒரு பிணத்தின் மீது ஏறி அமர்ந்து, எவ்வித பயமும் இன்றி அதை உச்சரித்தாலோ சரஸ்வதிதேவி உன் முன் தோன்றுவாள். விரும்பும் வரத்தைப் பெறலாம் என்று சொல்லியிருந்தார்.
தன் கணவரால் தேசத்துக்கு ஏற்பட்ட களங்கம், மகன் ஸ்ரீஹர்ஷனால் நீங்க வேண்டுமென விரும்பிய அவள், அந்தச் சிறுவனுக்கு சிந்தாமணி மந்திரத்தை உபதேசித்தாள். தொடர்ந்து பயிற்சி கொடுத்தாள். சிலநாட்களிலேயே பயிற்சி ஆகி விட்டது. ஒருநாள் இரவில், தன் மார்பின் மீது அவனை படுக்க வைத்து, மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும்படி வலியுறுத்தினாள். அந்தச் சிறுவன் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், இருளைப் பயன்படுத்தி தன் கழுத்தை அறுத்து இறந்து போனாள்.
இதையறியாத சிறுவன், தாயின் அணைப்பில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மந்திரத்தை விடிய விடிய உச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் முன்னால் சரஸ்வதி தேவி பேரொளியுடன் தோன்றினாள். 
சிறுவனின் நாவில் "ஓம்' என்று எழுதினாள். அவன் தலைசிறந்த கவிஞனாவான் என்று வாக்களித்தாள். தாய் இறந்து கிடப்பதைக் கண்ட மகன், அவளுக்கு மீண்டும் உயிரளிக்க கேட்டுக்கொண்டான். 
சரஸ்வதிதேவி அவளை எழுப்பினாள். உலகம் போற்றும் கவிஞனாக ஸ்ரீஹர்ஷன் விளங்குவான் என உறுதிபடக் கூறினாள்.
இவரே, நளசரிதம் எழுதியவர். ஒரு மனிதன் எந்தக் கஷ்டத்திலும் மனம் கலங்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். இன்றும் கிரகசாரங்களால் மனிதன் கஷ்டப்படும் போது, நள சரிதத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் எழுந்ததும் நளனை நினைத்து விட்டு பணிகளைத் தொடர்ந்தால், எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நைஷதம் என்ற சமஸ்கிருத நூலை எழுதியவர் இவரே. வாழ்வின் ஒழுங்குமுறை குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் இந்த நூலை அதிவீரராம பாண்டியன் மொழி பெயர்த்துள்ளார்.

Wednesday 26 February 2014

மகா சிவராத்திரியில் பாட வேண்டிய எளிய பாடல்கள்!

சிவராத்திரி,  தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை... நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை.. பிறப்பினால் ஏற்படும் துக்கதைப் போக்குகின்ற லிங்க மூர்த்தியை.. எப்போதும் மங்கலத்தை அருளும் மகாலிங்கத்தைப் போற்றுகிறேன்... எனத் துவங்கி எட்டு ஸ்லோகங்களால் பரமனைப் போற்றும் ஆதிசங்கரர், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட சிவலோகத்தில் வசிக்கும் பேரானந்த பெருநிலையை அடைவான் என்றும் அறிவுறுத்துகிறார். இதோ... மகாலிங்கத்தைப் போற்றும் லிங்காஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று தரப்பட்டுள்ளது.


கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

பொருள் : தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். இவ்வாறு விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின் எட்டு நாமங்களையாவது ஓயாமல் ஜபிக்க வேண்டும் அவை:

ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம

சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்!

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!

உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!

சிவராத்திரி பிரார்த்தனை:

உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.

பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.

ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.

ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.

மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.

தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி  அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.

திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.

கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.

இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.

ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!

சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங்களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.

சிவராத்திரி விரத மகிமை:
 விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும்.  மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

செல்வம் தரும் சிவராத்திரி:
 மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன் முனிவரிடம், ஐயனே! நான்  சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்.

விரதம் இருப்பது எப்படி?


மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி நாளே சிவராத்திரி தினம். இந்நாளில் காலையில் நீராடி, தூய உடை உடுத்தி சிவநாமம் ஜெபித்து திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். பகலில் உண்ணாமலும், இரவு முழுவதும் தூங்காலும் கண்விழித்து இருக்க வேண்டும். இயலாதவர்கள், பால், பழம் சாப்பிடலாம். ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய ஓம் சிவாயநம என்ற மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.  திருமுறைப் பாடல்களைப் பக்தியுடன் பாட வேண்டும். மறுநாள் காலையில் சிவதரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். பவர் தரும் விரதம்சிவராத்திரி விரதமிருந்து ஆற்றல் பெற்றவர்கள் பலர். பத்ரிகாசிரம முனிவர்கள் சிவபூஜை செய்து சித்தி பெற்றனர். இரண்யன் சிவபூஜை செய்து தேவர்களை வெல்லும் திறன் பெற்றான். தமன் என்னும் அசுரன், இந்திரனை வெல்லும் ஆற்றல் அடைந்தான். யாக்ஞவல்கியர், சிவராத்திரி விரத மகிமையால் ஞானம் அடைந்தார். தத்தாத்ரேயர், துர்வாசர், சந்திரன் சிவராத்திரி விரதமிருந்து சிவனருள் பெற்றனர்.  விநாயகர், முருகன், பிரம்மா, அம்பிகை என பலரும் சிவனை வழிபட்டு ஆற்றலை பலப்படுத்திக் கொண்டனர்.

சிவராத்திரி கொண்டாடுவது ஏன்?

பிரம்மாவும், விஷ்ணுவும் இறைவனின் அடியையும் முடியையும் தேடிய இரவே சிவராத்திரி. அப்போது, சிவன் லிங்கோத்பவராக எழுந்தருள தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபட்டனர். உலக உயிர்களின் நன்மைக்காக, அம்பிகை கண்விழித்து இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபெருமானை வழிபட்ட நாள். ஒரு சமயம், பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலகமே இருண்டு போனது. வெகுண்டு எழுந்த சிவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள், அவரை இரவு முழுவதும் வழிபட்ட நாள்.பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை, ஒன்று சேர்த்து சிவன் குடித்தார். அந்த இரவில் தேவர்கள் கண்விழித்து சிவனை பூஜித்தனர். சிவராத்திரி குறித்து புராணக்கதைகள் உள்ளன. ஆனால், ஆகம தகவல்களின் படி, அம்பிகையின் அம்சமான திரயோதசியும், சிவ அம்சமான சதுர்த்தசியும் இணையும் நேரம் சிவபூஜைக்குரிய புண்ணிய காலம் ஆகிறது.

சிவராத்திரி தோன்றியது எப்படி?

ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனாரை வழிபட்ட பார்வதியாள், இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.


பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள் அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும். மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும். இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம்,  உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.