Wednesday, 29 January 2014

வேதவதி - சீதை

                          வேதவதி என்பவள் மகாலட்சுமியின் அவதாரம்.
ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள்.  புகும் போது அடுத்த பிறவியில் உனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை நீ தொட்டால் உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்று சாபம் தந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்....!!!.

No comments:

Post a Comment