ஆன்மீக பூமியாம், அண்ணாமலையில் அவ்வப்போது அருளாளர்கள் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.
ஞானத் தபோதனர்களை வா என்று அழைக்கும் மலை என இதனை புராணங்கள் செப்புகின்றன.
தங்கக் கை ஸ்ரீசேஷாத்திரி பகவான் அருள்புரிந்த ஸ்தலம் திருவண்ணாமலை.
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருணாச்சல சிவம் என்கிற மந்திரத்தை அருளி பக்தர்களுக்கு உபதேசம் நிகழ்த்திய மலை திருவண்ணாமலை.
தற்போது அமரரான பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமிகள் இருந்ததும் திருவண்ணாமலையில் தான்.
சாதுக்களும், மகான்களும் பெருகி உள்ள திருத்தலமும் திருவண்ணாமலை ஆகும் ஆண்டிகள் பெருத்த ஊரும் அண்ணா மலையே.
மலையிலிருந்து சிவன் சிலை செய்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையின் சிறப்பு மலையே சிவனாக இருந்து அருள்பாலிப்பதாகும். மலையின் சுற்றளவு 18 கிலோ மீட்டராகும். சுற்றி வர சுமார் 4 மணிநேரமாகும்.
தெற்கே மதுரைக்கு அருகே திருச்சுழியில் வேங்கட ராமனாக அவதரித்து, மதுரை சொக்கப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்த இளைஞர், 16-வது வயதில் ஈர்க்கப்பட்டு, தவஞானியாக உரு மாற்றிய மலையும் திருவண்ணாமலைதான். கோவணத்துடன் இருந்து அவர் அருள் புரிந்தார். சூட்சுமங்கள் நிறைந்தது மானிட வாழ்வு என்ன நடக்கும்? என்பதை யாரும் அறிய முடியாது என்பதையும் வலியுறுத்திய அவர்தான் ரமணர்.
பௌர்ணமி நாளில் முழு நிலவின் ஒளியிலிருந்து, பதினாறு கலைகள் பிரகாசிப்பதாலும், அண்ணாமலையில் ஒளிக்கதிர்கள் சிதறி, மலை வலம் வரும் பக்தர்களின் உடலிலும், உள்ளத்திலும் ஊடுருவிப் பாய்வதாலும், மலை வலம்வரும் போது பக்தர்கள் எண்ணுவதை அப்படியே நிறைவேற்றிட அருளும், பொருளும், நோயற்ற வாழ்வும், வெற்றியும், மகிழ்வும், திருமணங்கள் நடைபெறவும், புத்திரப்பேறு ஏற்படவும், தரித்திரத்தையும், துக்கத்தையும், வறுமையையும் நீக்கி, செல்வத்தை தந்திடவும் ஓம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே பௌர்ணமி நாளில் மலை (கிரி) வலம் வருவோம். அண்ணாமலையாரின் அருள் பெறுவோம்.
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.
பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத் தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங் கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.
மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில்
அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது.
அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.
No comments:
Post a Comment