Wednesday, 19 February 2014

கந்தபுராணம் பாகம் - 10

மேருமலையையே கிள்ளி எறியும் பாலமுருகனின் செயல்கண்டு இந்திராதி தேவர்கள் ஆச்சரியமும் ஆத்திரமும் கொண்டனர். உலகில் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற மாயை கண்களை மறைத்தது. எனவே, சிறுவன் என்றும் பாராமல், முருகனைத் தட்டிக் கேட்டனர்.ஏ சிறுவனே ! உன் விளையாட்டை நிறுத்தப் போகிறாயா, இல்லையா ? என இந்திரன் ஆவேசமாகக் கேட்டான். தேவர் தலைவனே ! நானோ சிறுவன். நீயோ பெரும்படையுடன் வந்துள்ளாய். சிறுவர்கள் விளையாடுவது என்பது இயற்கை தானே ! என் விளையாட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே, என்றான். வருணன் இந்த பேச்சின் குறுக்கே புகுந்தான். கடலுக்குள் புகுந்து ஆமைகளையும், திமிங்கலங்களையும் கசக்கி பிழிந்து விளையாடுகிறாய். இது தவறில்லையோ ? என்றான். வருணனே ! பிதற்றாதே. பூலோகத்தில் குழந்தைகள் ஏரிகளில் இறங்கி மீன்பிடித்து விளையாடுகிறார்கள். நானும் ஒரு சிறுவன் தான். என் வீரத்தை சுயசோதனை செய்து கொள்ளும் பொருட்டு அவற்றை பிடித்து விளையாடுகிறேன். ஒரு வேளை என் கையால் அவை உயிர்விட்டால் கூட, அவற்றுக்கு முக்தியே கிடைக்கிறது. பிறப்பற்ற நிலையால் ஆனந்தம் கொண்டு, அவை சிவலோகப் பதவியை அடைந்துள்ளன. கணங்களாகவும், என் தாயின் கண்களுக்கு அழகு சேர்ப்பனவாகவும் அவை உருவெடுத்துள்ளன. அதனால் என் அன்னை மீனாட்சி என்ற திருநாமம் பெற்றிருக்கிறாள். தேவர்களே ! என் பிறப்பின் ரகசியம் உங்களுக்கு மறந்து விட்டதோ ! நான் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ? என்றார்.


தேவர்களும் முருகனை எதிர்த்துப் பேசினர். குழந்தாய் ! அந்த சிவனும், பார்வதியுமே ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும் தன்மை படைத்தவர்கள். உனக்கு ஏது அந்த சக்தி ? ஏதுமறியா சிறுவனான நீ, இதோடு நிறுத்திக் கொண்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவோம், என்று மிரட்டினர்.வேலன் அந்த வாய்ச்சொல் வீரர்களின் மீது சிகரத்தின் ஒரு பகுதியைப் பிடுங்கி வீசி எறிந்தான். தேவர்கள் சிதறியடித்து ஓடினர். தேவேந்திரன் அம்புமாரி பொழிந்தான். அவையெல்லாம் மலர்மாலைகளாகி கந்தனின் கழுத்தில் விழுந்தன. முருகன் தன் கையிலிருந்த சின்னஞ்சிறு அம்புகளை தேவர்கள் மீது அடித்தான். ஒரு அம்பு தேவவேந்திரன் வீற்றிருந்த ஐராவதம் யானையின் மத்தகத்தை குத்திக் கிழித்தது. அது அலறியபடியே விழுந்து இறந்துது. யானை மீதிருந்த இந்திரன் தரையில் உருண்டான். இதைப் பார்த்து கந்தன் கைகொட்டி சிரித்தான். இந்திரனுக்கு ஆத்திரம் அதிமாகி தன் வஜ்ராயுதத்தை வடிவேலன் மீது எறிந்தான். அதை அவன் சுக்கு நூறாக்கினான். அனைத்து ஆயுதங்களும் தீர்ந்து போகவே நிர்க்கதியான தேவர்கள் உயிர்பிழைக்க ஓடினர். அவர்களின் பலரைக் கொன்றான் வடிவேலன். தேவர்கள் பிரகஸ்பதியிடம் ஓடினர். அவர்தான் தேவர்களுக்கு குரு. தங்கøள் காப்பாற்றும்படி வேண்டினர்.


நடந்த விபரத்தை தன் ஞானத்தால் அறிந்த குரு, சிவமைந்தனிடம் மோதியது உங்கள் தவறல்லவா ? உங்கள் ஆணவத்தால் அறிவிழந்தீர்களே ! என்னிடம் பாடம் படித்தும் முட்டாள்களாக இருக்கிறீர்களே ! என் பெயரைக் கெடுத்து விட்டீர்களே ! சரி... நானே போய் அவரிடம் சரணடைகிறேன். என்று கூறி புறப்பட்டார்.பாலமுருகனைச் சந்தித்து, அவனை வாழ்த்தி வணங்கி நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சிவபெருமானே பிரகஸ்பதி என்று சொல்வாரும் உண்டு. அப்படியிருக்கும் போது, தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்கலாமா என்றால், குருவுக்கு குருவான முருகனிடம் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பணியில் இருக்கிறீர்கள். மேலதிகாரி வயதில் குறைந்தவராக இருந்தாலும், அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது போலத்தான் இதுவும்.பிரகஸ்பதியின் வேண்டுகோளை ஏற்ற பாலமுருகன் சினம் தணிந்தான். இறந்த தேவர்களை உயிர்பெறச் செய்தான். அவர்களின் ஆணவத்தை அழித்து, பக்தி ஞானத்தைக் கொடுத்தான். தானே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்யும் விதத்தில் ஆறுமுகங்களும், 12 கைகளும் விண்ணுயரம் உயர விஸ்வரூப காட்சி தந்தான்.

- தொடரும்

No comments:

Post a Comment