Wednesday, 19 February 2014

கந்தபுராணம் பாகம் - 7

அஜாமுகி துர்வாசரை மறித்து தன் இச்சைக்கு அடி பணியச் சொன்னாள். தவ சிரேஷ்டரான அவர் இக்கொடுமையை செய்ய முடியாது என மறுத்த பிறகும், அவரைப் பல வந்தப்படுத்தினாள். இதன் விளைவாக அவளுக்கு இல்வலன், வாதாபி என்ற மக்கள் பிறந்தனர். அவர்கள் தன் தந்தையின் தவப்பயன் முழுவதையும் தங்களுக்கு தரவேண்டினர். அவரோ மறுத்தார். எனவே அவரைக் கொல்லவும் துணிந்தனர் மகன்கள். படுகோபக்காரரான துர்வாசர், என்னைப் போன்ற முனிவர்களை துன்புறுத்துவதாலேயே நீங்கள் அழிவீர்கள், என சாபமிட்டார்.பின்னர் இல்வலன் பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து தன் தம்பி வாதாபியை வெட்டி அக்னி குண்டத்தில் போட்டான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மனிடம், பிரம்மனே ! நான் எத்தனை முறை என் தம்பியைக் கொன்றாலும், நான் அழைக்கும் போது உயிர் பெற்று வரும் வரம் தர வேண்டும், என்றான். அந்த வரம் அவனுக்கு கிடைத்தது. இல்வலன் அந்தணர்களை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து, தங்கள் இல்லத்தில் திதி நடப்பதாகவும், தான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும் என்றும் சொல்வான். வாதாபி உணவு வடிவில் அந்தணர்களின் வயிற்றுக்குள் போய், அவர்களின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான். இப்படி வேதம் கற்ற அந்தணர்கள் பலரைக் கொன்று குவித்தான். இப்படியாக அசுர வம்சம் செய்த அட்டூழியம் பெருகியது. ஒரு சமயத்தில் இந்திரனின் மனைவி இந்திராணியை பார்த்த சூரபத்மன் அவளை அடைய விரும்பினான். அவர்கள் ஓடி ஒளிந்தனர். பின்னர் சாஸ்தாவின் அருளால் அவள் தப்பிக்க வேண்டியதாயிற்று. இந்திராணியைக் காப்பாற்ற, சிவ மைந்தரான சாஸ்தாவின் காவலர் மகாகாளர், சூரனின் தங்கையான அஜாமுகியின் கையை வெட்டி விட்டார். இப்படி சூரர்களுக்கும், தேவர்களுக்கும் பகைமை வளர்ந்தது. தேவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலரை சூரன் கொன்றான். ஆனால், அவர்கள் அமிர்தம் குடித்திருந்ததன் பலனாக மீண்டும் எழுந்து விட்டனர், வேறு வழியின்றி, அவர்களை தன்னாலான மட்டும் கொடுமை செய்தான் சூரபத்மன்.


தேவர்கள் மகாவிஷ்ணுவின் தலைமையில் கூடி, சூரர்கள் இந்தளவுக்கு வளரக் காரணமாக இருந்த சிவபெருமானால் தான், அவர்களை அழிக்கவும் முடியம். எனவே அவரை அணுகுவதென முடிவு செய்தனர். எல்லாருமாக, விஷ்ணுவின் தலைமையில் கைலாயம் சென்றனர். நந்திதேவரின் அனுமதி பெற்று, சிவபெருமானைச் சந்தித்தனர். அவருக்கும், பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாய் பிறந்த பார்வதிக்கும் அப்போது தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர்களிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். ஐயனே ! அசுரர்கள் எங்கள் பொருளை கொள்ளையடித்தனர். உலகங்களை ஆக்கிரமித்தனர். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தேவர்களில் பலர் சிறையில் கிடக்கின்றனர். வேதம் கற்ற அந்தணர்களை வாதாபி என்ற அசுரன், கொன்று குவிக்கிறான். நவக்கிரகங்களும் தங்கள் பணியைச் செய்வதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். ஆனால், இப்போது மாற்றான் மனைவி எனத் தெரிந்தும், இந்திராணியை அடைய விரும்புகிறான் பத்மாசுரன். இந்த கேவலத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கேவலத்தை தடுக்க இந்திரனின் மகன் ஜெயந்தன் முயன்றான். இப்போது அவனும் சிறையில் கிடக்கிறான். இனியும் தாங்கள் பொறுத்தால், தேவர் உலகமே இல்லாமல் போய்விடும், என்றனர். சிவபெருமான் இதெல்லாம் தெரியாதவரா என்ன ! இருந்தாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார்.உலக மாந்தர் என்ன அட்டூழியம் செய்தாலும் பூமியும், வானமும் தாங்கும். ஆனால், விரும்பாத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தும் போது மட்டும் தாங்கவே செய்யாது. பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்படும் இடம் பூலோகமாயினும் சரி.... ஏழுலகில் ஏதாயினும் சரி.... அங்கே அழிவு துவங்கி விடும்.


அசுர உலகத்துக்கும் அழிவு துவங்கி விட்டது. சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். தேவர்களே ! கலக்கம் வேண்டாம். என் அனுமதியின்றி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டு, நீங்கள் செய்த பாவத்தின் பலனை இதுவரை அனுபவித்தீர்கள். இனி, நீங்கள் சுகமாக வாழலாம். அந்த சுகத்தை எனக்கு பிறக்கும் மகன் வடிவேலன் உங்களுக்கு தருவான், என்றார். தேவர்கள் மகிழ்ந்து, ஐயனே ! எங்களை வாழ வைக்கப் போகும் இளவல் வடிவேலன் எப்போது வருவார் ? எனக் கேட்டனர்.சிவன் அவர்கள் முன்னிலையிலேயே, பார்வதியை ஆசையுடன் பார்த்தார். அப்போது அவருடைய நெற்றியில் இருந்து அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அந்த அனலின் வேகத்தை தாங்க முடியாமல் தேவர்கள் ஓடினர். பார்வதிதேவியாலும் அந்த வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் எழுந்து ஓடினாள். சிவனின் நெற்றியிலிருந்து பறந்த நெருப்பு பொறிகள் ஜொலிக்கும் ஆறு நெருப்பு பந்துகளாக மாறின. அவற்றின் அருகே நெருங்க முடியாத தேவர்களை நோக்கி, தேவர்களே ! நீங்கள் உங்கள் கண்ணெதிரே பார்ப்பது வண்ண வடிவேலனின் நெருப்பு முகங்கள். அவன் ஆறுமுகம் கொண்டவனாக இருப்பான். இவனே உங்கள் வினை தீர்ப்பவன், என்றார்.தேவர்கள் அந்த நெருப்பு பந்துகளை வணங்கினர். அதே நேரம் இந்நெருப்பு பந்துகளை தங்களுடன் எடுத்துச் செல்வது எப்படி என ஆலோசித்தனர்.சிவபெருமான் அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு, தேவர்களே ! கவலை வேண்டாம். இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் என் மகன் ஆறு குழந்தைகளாக வளர்வான். ஆமாம்... இவர்களை வளர்க்கும் பொறுப்பை யார் ஏற்கப் போகிறீர்கள் ? என்றார். அப்போது ரிஷிபத்தினிகள் ஆறு பேர் சிவபெருமான் முன் வந்து நின்றனர். தேவாதிதேவா ! அந்த குழந்தைகளுக்கு நாங்களே தாயாக இருந்து வளர்த்து வருவோம். எங்களிடம் ஒப்படையுங்கள், என்றனர்.



 - தொடரும் 

No comments:

Post a Comment