Friday, 23 August 2013

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.
“அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். “மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.”
காலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.
சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய ‘மரகதலிங்கம்’ முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை ‘பாதுஷா லிங்கம்’ என்றே அழைக்கின்றனர்.
திப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை ‘பிரதிஷ்டை’ செய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. “அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.
தனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. “இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்” என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.

Thursday, 15 August 2013

சிபிச் சக்ரவர்த்தி

கருணைக்கும் கொடைத்திறனுக்கும் பெயர்பெற்ற அரசர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். அப்படிப் பட்டவர்களில் ஒருவன் சிபி. அவன் மிருகங்கள், பறவைகளிடம் கூடக் கருணை காட்டுபவன். அவனிடம் கொடை வேண்டி வந்தவர்கள் யாரும் வெறுங்கையுடன் திரும்பியதில்லை.
அப்படிப்பட்ட சிபியின் புகழ் தேவலோகத்தை எட்டியது. தேவேந்திரன் சிபியைச் சோதித்துப் பார்க்க விரும்பினான். அக்கினி பகவானை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தான். இந்திரன் ஒரு கழுகு வடிவத்திலும், அக்கினி ஒரு புறா வடிவத்திலும் வந்து சேர்ந்தார்கள். புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்தது.
தனது நந்தவனத்தில் சிபிச் சக்ரவர்த்தி ஏழைகளுக்கு உணவு அளித்துக்கொண்டிருந்தான். அவர்கள் எல்லோரும் சென்ற பின்  தனது அரண்மனைக்குச் செல்லத் திரும்பிய சிபியின் கையில் ஒரு புறா வந்து விழுந்தது. அந்தப் புறாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்கள் பரிதாபமாக அவனைப் பார்த்தன. "என்னை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும்.." என்பது போல அவன் மடியில் சுருண்டு விழுந்தது.
"கவலைப்படாதே! நான் உன்னை எப்படியாவது காப்பாற்றுகிறேன்!" என்று அந்தப் புறாவைக் கையில் எடுத்து தடவிக்கொடுத்தான் சிபி. அப்போது ஒரு பெரிய கழுகு அவன் முன்னால் வந்து உட்கார்ந்துகொண்டது. சிபியின் மடியில் இருந்த புறாவைக் கவ்வி எடுத்துக்கொண்டு போக முயன்றது. சிபி அதைத் தடுத்து ஒதுக்கினான். புறாவின் பயத்துக்கான காரணம் என்னவென்பது இப்போது அவனுக்குப் புரிந்தது.
"அரசனே! அந்தப் புறா என்னுடைய பசியைத் தீர்க்கவேண்டிய இரையாகும். என்னைத் தடுக்காதே! புறாவைக் கீழே விடு. " என்று அதிகாரமாகப் பேசியது கழுகு. மனிதனைப் போல அது பேசியதைக் கேட்க பெரும் வியப்பாக இருந்தது சிபிக்கு.
"நீ யார் என்பது எனக்குத் தெரியவில்லை. மனிதனைப் போலப் பேசும் உன் சக்தியும் என்னை வியப்படையச் செய்கிறது. எதுவானாலும், இந்தப் புறா தற்போது என்னை நாடி வந்துள்ளது. அதைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. அதனால் இந்தப் புறாவை நீ பறித்துச் செல்வதை
என்னால் அனுமதிக்க முடியாது!" என்றான் சிபி.
"அரசே! நீங்கள் எல்லாருக்கும் நியாயம் சொல்ல கடமைப்பட்டவர். புறாவுக்காக மட்டும் நீங்கள் பரிந்துபேசுவது தவறு. புறாவைப் போல நீங்கள் தான் என்னையும் காப்பாற்றவேண்டும். பசியால் வாடும் என் கதி என்ன? எனக்குக் கிடைக்க வேண்டிய இரையை நீங்கள் பிடுங்கிக்கொண்டு விட்டீர்களே? நான் பசியால் இறந்துபோக வேண்டும் என்பதுதான் நீங்கள் கூறும் நியாய தர்மமா? " என்று கேட்டது கழுகு.
இதைக் கேட்ட சிபி திகைத்துப் போனான்.  மனிதனைப் போலவே பேசுவதல்லாமல், விவாதம் செய்யும் திறனும் அக்கழுகுக்கு இருப்பதைக் கண்ட அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. புறாவுக்கு ஆதரவு கொடுத்ததைப் போலவே கழுகின் பசியைத் தீர்ப்பதும் தன் கடமை என்பதை உணர்ந்தான்.
கழுகிடம், "உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத் தருகிறேன். ஆனால் புறாவை விட்டுவிடு." என்று கூறினான்.
"அரசே! புறாவுக்குப் பதிலாக எனக்கு மாமிசம் உடனே தேவை! அது மனித மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை.  உங்களுக்கு உட்பட்ட மிருகம் அல்லது மனிதனைக் கொன்று எனக்குக் கொடுங்கள்.  என்னால் பசி தாங்க முடியவில்லை!" என்றது கழுகு.
"உன் பசியை ஆற்ற நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அதற்காகப் பிறரைத் துன்புறுத்த என் மனம் இடம் கொடுக்காது. உனக்குத் தேவையானது புறாவின் எடையளவு மாமிசம் தானே! அதை நான் என் உடலிலிருந்தே வெட்டித் தருகிறேன்." என்று கழுகிடம் உறுதி கூறிவிட்டு சிபி திரும்பினான்.
பணியாளரை அழைத்து ஒரு தராசைக் கொண்டு வரச்செய்தான்.
தராசின் ஒரு தட்டில் சிபி அந்தப் புறாவை வைத்தான். மறு தட்டில் தன் உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான்.  புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. தொடர்ந்து சிபி தன் உடலிலிருந்து பகுதி பகுதியாக வெட்டி எடுத்து வைக்கத் தொடங்கினான். எவ்வளவு வெட்டி வைத்தாலும் புறாவின் தட்டுக்குச் சமமாக முடியவில்லை. கடைசியில் சிபி கழுகைப் பார்த்து, "புறாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நான் என்னையே கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. நானே தட்டில் ஏறி அமர்ந்துகொள்கிறேன். என்னை ஏற்றுக்கொள்!" என்று கூறிவிட்டுத் தட்டில்
ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலையில் இறங்கிவிட்டது.
மறுகணமே கழுகு இந்திரனாகவும். புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள். சிபியை அவர்கள் அன்புடன் தொட, அவன் உடல் சிதைவு எல்லாம் மாயமாய் மறைந்து தேகம் புதுப் பொலிவு பெற்றது.  தேவர்களைக் காலில் விழுந்து வணங்கினான் சிபி. " என்னைக் காணத் தாங்கள் மாறுவேடத்தில் வந்த காரணம் என்னவோ? " என்று கேட்டான்.
"அரசே! உன் புகழைக் கேள்விப்பட்டு, அதைச் சோதித்துப் பார்க்கவே வந்தோம். உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் புரிந்துகொண்டோ ம். நீ எல்லா நலமும் பெற்று நீடூழி வாழவேண்டும்!" என்று வாழ்த்தி மறைந்தார்கள்.
அரசாட்சி செய்பவன் தன்னலமின்றி இருக்கவேண்டும். தியாகம் செய்யவேண்டும் என்று வரும்போது தன்னையே முதலில் அர்பணித்துக்கொள்ளவேண்டும். எளியாரை வலியார் துன்புறுத்த வந்தால் எளியவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். எல்லாருடைய குறைகளையும்
சமமாகப் பாவித்து நியாயம் வழங்கவேண்டும். அப்படிப்பட்ட அரசன் ஆளும் நாட்டுக்கு எந்தக் குறையும் ஏற்படாது.  இதை எடுத்துச் சொல்வதுதான் சிபிச் சக்ரவர்த்தியின் கதை.

Wednesday, 14 August 2013

திருவண்ணாமலை ஸ்தல வரலாறு

ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தமக்குள் யார் 

உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று.  இதனால் இருவரும்

சிவபெருமானை மத்யஸ்திற்கு அழைத்தார்கள்.  ஆகையால் 

சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை 

போக்க ஒரு போட்டி வைத்தார்.  யார் முதலில் தன்னுடைய அடியையோ 

அல்லது முடியையோ பார்த்து சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார்.

பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் 

விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து

சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.தான் செய்தது தவறு என்று 

ஏற்றுக் கொண்டார்.  அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி 

முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் 

முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் 

காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிரம் வருஷ காலமாக கீழே விழுவதால் 

தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோற்க்கக்கூடாது

என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக 

பொய் சாட்சி கூற கூறினார்.  இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.

இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு

பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ

பூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது  இதை என்றும் மறவாதிருக்க 

உனக்குள்  பூநாகம் குடியேறும் என்றும் சபித்தார்.  அப்படி ஜோதியாக 

சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.



இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும்

 பல சந்நிதிகள் இருக்கிறது.  முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது.

மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.  மற்ற

 பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன் 

சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி,  வள்ளாள மகாராஜா

கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், 

ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது. 


இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம்.  இந்த மரம் மருத்துவ 

குணங்களை கொண்டுள்ளது.  குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் 

சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள்.  குழந்தை

பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் 

செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.


Monday, 12 August 2013

பதிவிரதை காந்தாரி!

இவள் காந்தார தேசத்து அரசர்  சுலபனின்  புதல்வி.

தீவிர சிவபக்தை ஆவாள். இவளுக்கு சகுனி என்றொரு 

சகோதரன் இருந்தான். பீஷ்மரின் அறிவுறுத்தலால் 

திருதராஷ்டிரரை திருமணம் செய்துகொண்டாள். ஒரு சமயம் 

திருதராஷ்டிரர்  தான் பார்வையற்றவர் என்றுகூறி மனம் 

வருந்தினார். தன் கணவர் காணமுடியாத உலகை தானும் 

இனி காணபோவதில்லை என்று முடிவெடுத்தாள். 

 தன் வாழ்நாள் முழுவதையும் கண்களை கட்டிக்கொண்டு

வாழ்ந்தாள்.  பதிவிரதையின் அறத்திற்கேற்ப வாழ்ந்தாள்.

வியாசரின் வரத்தால் 101 குழந்தைகளை பெற்றாள்.  

இவளின் முதல் குழந்தை துரியோதனன் ஆவான்.


(பார்வை இருந்தும் கணவரின் நிலைகருதி பயன்படுத்தாமல்

 இருந்தது அசாதாரண விஷயம். எனவே பதிவிரதைக்கு சிறந்த 

எடுத்துக்காட்டாய்  காந்தாரி திகழ்கிறாள் )

Saturday, 10 August 2013

பழனி முருகன் கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.

இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியதே என்பர். 

இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் "திரு ஆ இனன் குடி" என்று பெயர் பெற்றது.

திரு - லட்சுமி
ஆ - காமதேனு
இனன் - சூரியன்
கு - பூமாதேவி
டி - அக்கினிதேவன்

இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.

அமைவிடம் :

மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.

இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.

மலையின் மகிமை :

பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திரு நீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.

திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.

கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.

பழம் நீ - பழனி :

முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.

பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.

முருகனின் திருவிளையாடல் :

பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தபடியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். முருகன் இதில் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.

இடும்பனின் பக்தி :

இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியிலேயே நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருள்புரியவும் பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார். இடும்பன் வழி தெரியாது தவித்துக் கொண்டு நின்றான்.

முருகப்பெருமான் இடும்பனைத் திருவாவினன் குடிக்கே அழைத்து வந்து சற்று இளைப்பாறி விட்டுப் போகும்படி கூறினார். அவ்வண்ணமே இடும்பனும் காவடியை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினான். மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. அதன் காரணத்தை ஆராய்ந்தான் இடும்பன்.

அப்போது சிறுவன் ஒருவன் கோவணத்தாண்டியாய் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றின்மீது நிற்பதைக் கண்டான் இடும்பன். அச்சிறுவனை நோக்கி மலையை விட்டுக் கீழிறங்கும்படிக் கட்டளையிட்டான் இடும்பன்.

ஆனால் அச்சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென்று உரிமை கொண்டாட, இதனால் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

பின்னர் இடும்பன் மனைவியான இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடி வந்து வேண்டிக் கொள்ளவே, அவர்களுக்காகவே சிறுவனாக வந்த முருகன் மனமிறங்குவது போன்று இடும்பனை உயிர்ப்பித்தார்.

காவடி எடுப்பதன் காரணம் :

இடும்பனது சீலத்தையும் குருபக்தியையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு இடும்பனைப் போன்று, சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களையெல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோர்க்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார்.

அன்றுமுதல் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.

மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப் பாதையிலுள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்லுதல் வேண்டும். இடும்பன் சிறந்த வரப்பிரசாதியாய் விளங்கி அருள்புரிகின்றார்.

இச்சிவகிரியின் உச்சியில்தான் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படும் முருகன் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

வேலாயுத சுவாமி :
திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர்.

இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.

இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.

தல விருட்சம் :
இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு. என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும்.

திருவாவினன்குடி கோயிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.

இம்மலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும்.

மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.

அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.

ஆறுமுகனின் ஆண்டிக்கோலம் :
மூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார்.

ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்.

மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், "நவபாஷாணம்" எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும்.

பூஜை சிறப்பு :
இப்படை வீட்டில் முருகப்பெருமான் அபிஷேகப் பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை.

அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

தண்டாயுதபாணி சுவாமியை மொட்டையாண்டியாகப் படங்களில் சித்தரித்திருந்தாலும், இப்பெருமான் சடாமுடியுடனே விளங்குகின்றார் என்பதனை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.

ஆதியில் போக சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிப்பட்டு வந்த ஞான தண்டாயுதபாணியின் கோயில் முதன்முதலில் சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக இத்தலத்தில் வழிபட கேரள மக்கள் மிகவும் அதிகமாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சபரிமலை ஐயப்ப சுவாமியைச் சென்று தரிசித்து வருபவர்களும், குருவாயூரப்பனைத் தரிசித்து வருபவர்களும் பழனிக்குச் சென்று பழனி ஆண்டவனையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற வழக்கமும் நிலவி வருகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்தப் பெருமானை ஞான தண்டாயுதபாணி வடிவில் வணங்கி, தரிசனம் செய்து ஞானமும், அருளும் பெறுவோமாக!

சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல்குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."


(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. —

தீபாவளி கொண்டாடாத வினோதம்

 தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள் என்றாலும், தீபாவளி என்றால், குதூகலம், கொண்டாட்டத்திற்கு எல்லை இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை, ஒரு மாதத்திற்கு முன்பே, எதிர்பார்ப்புகள் ஏங்க வைக்கும். ஆனால் தீபாவளி கொண்டாடாத கிராமங்களும் உண்டு. சிவகங்கை மாவட்டம் எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 50 ஆண்டுகளாக தீபாவளி இல்லை. வறட்சி, பஞ்சம், கடன் சுமை ஆகியவை பதித்த கோரச்சுவடுகள் தான் இதற்கு காரணம்.

இதன் பின்னணி: சிவகங்கை மாவட்டத்தில், "நாடு' என்ற கிராம அமைப்பு, மன்னர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. அன்று நிர்வாக வசதிக்காக சிறு, சிறு நாடுகளாக பிரிக்கப்பட்டவை, இன்றளவும் மாறவில்லை. மயில்ராயன்கோட்டை நாட்டில் மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, எருமப்பட்டி என பல கிராமங்கள் உள்ளன. இதில் மாம்பட்டி முதன்மை கிராமம். இதன் "அம்பலகாரர்' (தலைவர்) சேவுகன், விதித்த தீபாவளி தடை இன்றும் மீறப்படவில்லை.

வறுமை: கடும் வறட்சி நிலவிய நேரத்தில் விவசாயிகள், வட்டிக்கு கடன் வாங்கி தீபாவளியை கொண்டாடினர். வட்டியாக நெல் மூடை தரும் வழக்கம் இருந்தது. கடனை அடைக்க, கழனியில் கடுமையாக உழைத்தும் இயலாத நிலையே இருந்தது. பெரு விவசாயிகள் நெல், தானியங்களை அடகு வைத்து, நெல்லுக்கு நல்ல விலை வரும் போது, கடனை அடைத்தனர். காலப்போக்கில் ஏழை விவசாயிகள் தீபாவளியை மறந்தனர். வசதி படைத்தவர்கள் தீபாவளி கொண்டாடும் போது, எளியோர் ஏங்கி தவிக்கும் சூழல் நிலவியது. கிராமத்திற்குள் நிலவிய இந்த வேற்றுமை உணர்வு, உறவுகளை பாதித்தது. இதனால் கிராமத்தினரை ஒன்று கூட்டி, தீபாவளியை புறக்கணிப்பது என அறிவித்தார் சேவுகன் அம்பலம். அன்று முதல் இங்கு தீபாவளி இல்லை; வெளியூர்களில் வசிக்கும் இக்கிராமத்தினரும் தீபாவளி கொண்டாடுவதில்லை. அன்று வெளியூர் செல்வதைக்கூட தவிர்க்கின்றனர். புதுமண தம்பதியருக்கு "தலைத்தீபாவளி' சம்பிரதாயமும் இல்லை. தடை விதித்த சேவுகன் மகன் சபாபதி கூறுகையில்,""இங்கு பெண் எடுத்தவர்கள், பெண் கொடுத்தவர்களும் ஊர் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளிக்கின்றனர். பல ஆண்டுகள் கடந்தும், கொடுத்த வாக்கை மதிக்கிறோம். தைப்பொங்கல் அன்று, புது ஆடை அணிந்து குதுகலமாக கொண்டாடுவோம்,'' என்றார்.

சாவித்திரி கதை


           அஸ்வபதி என்ற மன்னனுடைய மகள் சாவித்திரி. இவள் ஒருமுறை காட்டிற்கு சென்றபோது அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்தாள். அவன் மீது சாவித்திரிக்கு காதல் ஏற்பட்டது. அதே போன்றுதான் சத்தியவானுக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் உயிராக காதலித்து வந்தனர். 
இதுபற்றி தனது தந்தையிடம் கூறி விரைவில் சத்தியவானை திருமணம் செய்ய எண்ணினாள் சாவித்திரி. அவளது எண்ணத்தை நாட்டுக்கு திரும்பியதும், தனது தந்தை அஸ்வபதியிடம் தெரிவித்தாள். 'தந்தையே! நான் காட்டில் சத்தியவான் என்ற இளைஞரை சந்தித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள என் மனம் விரும்புகிறது' என்று கூறினாள்.
 அற்ப ஆயுள் உள்ளவன்............ மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சத்தியவான் யார் என்பது பற்றி அஸ்வபதி விசாரிக்க தொடங்கினார். அப்போது, சத்தியவான் ஒரு அரசகுமாரன் என்பதும், ஆனால் அவனுக்கு அற்ப ஆயுள் என்பதும் நாரத முனிவர் மூலமாக அஸ்வபதி அறிந்து கொண்டார். 

மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை என்றாலும், அற்ப ஆயுள் உள்ளவனுக்கு மகளை கொடுத்து, தெரிந்தே அவளது வாழ்க்கையை அளிக்க அன்புள்ள தந்தையால் எப்படி முடியும். ஆகவே, சாவித்திரியிடம் இதுபற்றி கூறி 'சத்தியவானை திருமணம் செய்து கொள்ள வேண்டாம்' என்றுகூறினார். 

ஆனால் மகள் பிடிவாதமாக இருந்தாள். இறுதியில் சாவித்திரியின் பிடிவாதமே வென்றது. சத்தியவா னுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் நடைபெற்றது. 
உயிரைப் பறித்த எமன்.......... ஒரு முறை காட்டில் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தான் சத்தியவான். அன்றைய தினம் காரடையான் நோன்பு நாள். அந்த நாளே சத்தியவானின் இறுதிநாளாகவும் இருந்தது. அந்த சமயத்தில் எமன் அங்கு வந்து தனது பாசக்கயிற்றை வீசி சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு சென்றான். 

யார் கண்ணுக்கும் புலப்படாத எம தர்மன், உத்தமியான சாவித்திரியின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை. சத்தியவானின் உயிரை பறித்துச் சென்று கொண்டிருந்த எமனை, பின் தொடர்ந்தாள் சாவித்திரி. ஒரு பெண் தன்னை தொடர்வதை கண்டு சற்று அதிர்ச்சியுற்ற எமன், 'உனக்கு என்ன வேண்டும் கேள்! அதை விடுத்து என் பின்னால் வந்து என்னை தொந்தரவு செய்யாதே!' என்றார். 

வரத்தால் உயிர் மீட்பு............ அதற்கு சாவித்திரி, 'எனக்கு பிறக்கின்ற நூறு குழந்தைகளையும், தன் மடியில் வைத்துக் கொண்டு என் மாமனார் கொஞ்ச வேண்டும்' என்று வரம் கேட்டாள். சற்றும் யோசிக்காத எமதர்மன், 'அப்படியே ஆகட்டும்' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவரை மீண்டும் வழிமறித்த சாவித்திரி, 'நீங்கள் அளித்த வரம் உண்மையானால், என் கணவரின் உயிரை திருப்பி தாருங்கள்' என்றாள். 

அப்போதுதான், தான் செய்து விட்ட தவறின் பிழை புரிந்தது எமதர்மனுக்கு. கொடுத்த வரத்தை மீற முடியாமல் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார் எமதர்மன். 

செல்லம்மாள் பாரதி

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டிவருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று-என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
(திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை வருடம்:1951)

உலகில் முதல் தற்கொலைப்படை போராளி.

இந்திய விடுதலை போராட்டத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வேலுநாச்சியார்.
1772-ல் பான்ஜோர் என்ற ஆங்கிலேயனால்...
‘வேலுநாச்சியாரின் கணவர்’ முத்து வடுகநாதன்,அவரது மகள் கவுரி நாச்சியார் கொல்லப்பட்டனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை வேட்டையாடினான்.
அவனை தீர்த்து கட்ட சின்ன மருது,பெரிய மருது,வேலு நாச்ச்சியார் தலைமையில் மூன்று போராளி குழுக்கள் அமைக்கப்ப்பட்டன.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேச்வரம் கோவிலில் விஜயதசமி அன்று பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது ஐதீகம்.

அதைப்பயன்படுத்தி வேலுநாச்சியார் தலைமையில் பெண்கள் போராளி குழு உள்ளே நுழைந்து ஆங்கில நவாப் வீரர்களை தாக்கினர்.
முற்றிலும் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன பான்ஜோர் சுதாரித்து...கடும் எதிர் தாக்குதலை நடத்தினான்.
அரண்மனைக்கு உள்ளே வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்தது.

இது வரை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்யப்படாத சம்பவம் இக்கடும்போரில் நடைபெற்றது.
கரியநிறமுள்ள வீர தமிழச்சி தன் உடல் முழுவதும் எண்ணெய் ஊற்றிக்கொண்டு...
தனது உடலுக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்து மொத்தக்கிடங்கையும் பூண்டோடு அழித்தொழித்தாள்.
அந்த வீர மங்கையின் பெயர்தான் ‘குயிலி’
இவர்தான் உலகில் முதல் தற்கொலைப்படை போராளி.