சிவராத்திரி, தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை... நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை.. பிறப்பினால் ஏற்படும் துக்கதைப் போக்குகின்ற லிங்க மூர்த்தியை.. எப்போதும் மங்கலத்தை அருளும் மகாலிங்கத்தைப் போற்றுகிறேன்... எனத் துவங்கி எட்டு ஸ்லோகங்களால் பரமனைப் போற்றும் ஆதிசங்கரர், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட சிவலோகத்தில் வசிக்கும் பேரானந்த பெருநிலையை அடைவான் என்றும் அறிவுறுத்துகிறார். இதோ... மகாலிங்கத்தைப் போற்றும் லிங்காஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று தரப்பட்டுள்ளது.
கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
பொருள் : தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். இவ்வாறு விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின் எட்டு நாமங்களையாவது ஓயாமல் ஜபிக்க வேண்டும் அவை:
ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம
சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்!
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!
உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
சிவராத்திரி பிரார்த்தனை:
உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.
இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங்களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
செல்வம் தரும் சிவராத்திரி: மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன் முனிவரிடம், ஐயனே! நான் சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்.
மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி நாளே சிவராத்திரி தினம். இந்நாளில் காலையில் நீராடி, தூய உடை உடுத்தி சிவநாமம் ஜெபித்து திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். பகலில் உண்ணாமலும், இரவு முழுவதும் தூங்காலும் கண்விழித்து இருக்க வேண்டும். இயலாதவர்கள், பால், பழம் சாப்பிடலாம். ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய ஓம் சிவாயநம என்ற மந்திரத்தை ஜெபிப்பது நல்லது. திருமுறைப் பாடல்களைப் பக்தியுடன் பாட வேண்டும். மறுநாள் காலையில் சிவதரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். பவர் தரும் விரதம்சிவராத்திரி விரதமிருந்து ஆற்றல் பெற்றவர்கள் பலர். பத்ரிகாசிரம முனிவர்கள் சிவபூஜை செய்து சித்தி பெற்றனர். இரண்யன் சிவபூஜை செய்து தேவர்களை வெல்லும் திறன் பெற்றான். தமன் என்னும் அசுரன், இந்திரனை வெல்லும் ஆற்றல் அடைந்தான். யாக்ஞவல்கியர், சிவராத்திரி விரத மகிமையால் ஞானம் அடைந்தார். தத்தாத்ரேயர், துர்வாசர், சந்திரன் சிவராத்திரி விரதமிருந்து சிவனருள் பெற்றனர். விநாயகர், முருகன், பிரம்மா, அம்பிகை என பலரும் சிவனை வழிபட்டு ஆற்றலை பலப்படுத்திக் கொண்டனர்.
பிரம்மாவும், விஷ்ணுவும் இறைவனின் அடியையும் முடியையும் தேடிய இரவே சிவராத்திரி. அப்போது, சிவன் லிங்கோத்பவராக எழுந்தருள தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபட்டனர். உலக உயிர்களின் நன்மைக்காக, அம்பிகை கண்விழித்து இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபெருமானை வழிபட்ட நாள். ஒரு சமயம், பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலகமே இருண்டு போனது. வெகுண்டு எழுந்த சிவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள், அவரை இரவு முழுவதும் வழிபட்ட நாள்.பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை, ஒன்று சேர்த்து சிவன் குடித்தார். அந்த இரவில் தேவர்கள் கண்விழித்து சிவனை பூஜித்தனர். சிவராத்திரி குறித்து புராணக்கதைகள் உள்ளன. ஆனால், ஆகம தகவல்களின் படி, அம்பிகையின் அம்சமான திரயோதசியும், சிவ அம்சமான சதுர்த்தசியும் இணையும் நேரம் சிவபூஜைக்குரிய புண்ணிய காலம் ஆகிறது.
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனாரை வழிபட்ட பார்வதியாள், இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.
பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள் அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும். மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும். இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.
யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள்.
சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. கண்ணன்
தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை
ரசித்தவாறிருந்தாள்.
ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக்
கொண்டிருந்தான்.
""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?''
கேட்டாள் ராதை.
""எனக்குப் பசிக்கிறது!''
ராதை பதறினாள்.
""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து
வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''
"" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''
""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள். அங்கே
ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.
""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்.
""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும்
பெயர்பெற்றவர்!''
""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்!
அவர் என் பக்தர்!''
சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்!
அதிருக்கட்டும், உங்கள் மனத்தில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி. ஆனால்
அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும். என்னைத் தவிர வேறு எந்தப்
பெண்ணும் இருக்கக் கூடாது, ஞாபகமிருக்கட்டும்! கண்ணன் நகைத்தான்.
ராதை தொடர்ந்தாள்.
""இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும்
உன்னைத் தானே காண்கிறேன்!
"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான்
உங்களைத் திருத்த முயலவேண்டும்!''
""தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா. என்
தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள். நீ உன் குரலில் கட்டிப்
போடுகிறாய். என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக்
கேட்காத முட்டாள்கள்''.
""போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும்
வரும்போல் இருக்கிறது. என்னை அதிகம்
புகழவேண்டாம். எப்படியும் சாப்பாடு உறுதி!''
ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்.
""ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''
ராதை தலையாட்டியபடி, சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள்.
ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு
நீர்தான் இருந்தது. தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு
பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள். அவளது
நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தான்
கண்ணன்.
துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று
உணர்ந்துகொண்டார்.
""கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா
மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''
""உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார். என்னைத் தாய்
என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது
தாயின் பொறுப்பல்லவா?''
""எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும்
பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''
""அதையும் தான் சொன்னார். ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற
வேண்டும். கணவர் காத்திருக்கலாம். குழந்தை காத்திருக்கக் கூடாது!''
ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள். பசியின்
வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை. பார்க்க
ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல்
வயிறாரச் சாப்பிட்டார். இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு
விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. யமுனையில்
திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. வெள்ளத்தைப் பார்த்த ராதை
திகைத்தாள்.
""தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?'' - முனிவர் கவலையோடு
வினவினார்.
""அதுதான் எனக்கும் புரியவில்லை. நான் கண்ணனாக இருந்தால்
நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும். ஆதிசேஷனே
வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும்.
ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி
வழிவிடுமா என்ன?''
""ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும்
சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனை
வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள். வழி கிடைக்கும். நதியைக்
கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''
ராதை கலகலவென சிரித்தாள்.
""என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள். நான் தான்
இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன். அப்படியிருக்க இப்படியொரு
பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''
""தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை
நதியின் பாடு. நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான்
பாருங்களேன்!''
ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக்
கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது
உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினாள்.
மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில்
வழிவிட்டது. ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும்
கரைக்கு வந்து சேர்ந்தாள் ராதை. மறுகணம் நதி மீண்டும் இணைந்து
வழிமறைத்து மூடிக்கொண்டது! ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது.
""என்ன ராதா? நீ அனைத்தையும் கரைகண்டவள் என்பது உண்மைதான்
போலிருக்கிறது? இன்று இக்கரை அக்கரை இரண்டையும் கண்டுவிட்டாயே?''
""நான் கரைகண்ட லட்சணம் இருக்கட்டும். யமுனை இப்படி துர்வாசருக்குப்
பயப்பட வேண்டாம். அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்ன
பொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது''.
கண்ணன் நகைத்தவாறே கேட்டான்:
""அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''
""இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல்
கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று
சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர்.
அவர் சொன்னதைச் சொன்னேன். இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு
உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது. இந்த நதியை என்ன செய்தால் தகும்?''
""வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி
வழிபடுவோம்!''
""நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால்
பார்த்தது பொய்யா?''
""கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர
விசாரிப்பதுதான் மெய். துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்!
நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்''.
""அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடுவிசாரித்தாள்.
கண்ணன் சொல்லலானான்:
""அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன். ஆனால், ஒரு தட்டு உணவே
போதும் என்றேன். நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய். அந்த முனிவர், தன்
இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன்
உணவுமுழுவதையும் உண்டார். அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக
உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது. அவர் உண்ட
உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது. என் பக்தர்களின் பக்தியால் தான்
எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது. இனி நீ வற்புறுத்தினாலும் கூட
என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்திருக்கிறது. இந்த ரகசியத்தை
என் ராதைஅறியவில்லை. ஆனால் யமுனை அறிவாள். அதனால் தான்
அவள் விலகி வழிவிட்டாள்!''
கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
""கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன்
உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ
அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும்
துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக்
கொண்டு விடுகிறான்!''
ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து
சிரித்தாள்.
""ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும்
சாப்பிடுவதில்லை!''என்றான் கண்ணன்.
""ஏன்?'' என்று கேட்டாள் ராதை.
""நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றான்
கண்ணன். ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில்
இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது.
ஆன்மீக பூமியாம், அண்ணாமலையில் அவ்வப்போது அருளாளர்கள் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.
ஞானத் தபோதனர்களை வா என்று அழைக்கும் மலை என இதனை புராணங்கள் செப்புகின்றன.
தங்கக் கை ஸ்ரீசேஷாத்திரி பகவான் அருள்புரிந்த ஸ்தலம் திருவண்ணாமலை.
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருணாச்சல சிவம் என்கிற மந்திரத்தை அருளி பக்தர்களுக்கு உபதேசம் நிகழ்த்திய மலை திருவண்ணாமலை.
தற்போது அமரரான பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமிகள் இருந்ததும் திருவண்ணாமலையில் தான்.
சாதுக்களும், மகான்களும் பெருகி உள்ள திருத்தலமும் திருவண்ணாமலை ஆகும் ஆண்டிகள் பெருத்த ஊரும் அண்ணா மலையே.
மலையிலிருந்து சிவன் சிலை செய்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையின் சிறப்பு மலையே சிவனாக இருந்து அருள்பாலிப்பதாகும். மலையின் சுற்றளவு 18 கிலோ மீட்டராகும். சுற்றி வர சுமார் 4 மணிநேரமாகும்.
தெற்கே மதுரைக்கு அருகே திருச்சுழியில் வேங்கட ராமனாக அவதரித்து, மதுரை சொக்கப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்த இளைஞர், 16-வது வயதில் ஈர்க்கப்பட்டு, தவஞானியாக உரு மாற்றிய மலையும் திருவண்ணாமலைதான். கோவணத்துடன் இருந்து அவர் அருள் புரிந்தார். சூட்சுமங்கள் நிறைந்தது மானிட வாழ்வு என்ன நடக்கும்? என்பதை யாரும் அறிய முடியாது என்பதையும் வலியுறுத்திய அவர்தான் ரமணர்.
பௌர்ணமி நாளில் முழு நிலவின் ஒளியிலிருந்து, பதினாறு கலைகள் பிரகாசிப்பதாலும், அண்ணாமலையில் ஒளிக்கதிர்கள் சிதறி, மலை வலம் வரும் பக்தர்களின் உடலிலும், உள்ளத்திலும் ஊடுருவிப் பாய்வதாலும், மலை வலம்வரும் போது பக்தர்கள் எண்ணுவதை அப்படியே நிறைவேற்றிட அருளும், பொருளும், நோயற்ற வாழ்வும், வெற்றியும், மகிழ்வும், திருமணங்கள் நடைபெறவும், புத்திரப்பேறு ஏற்படவும், தரித்திரத்தையும், துக்கத்தையும், வறுமையையும் நீக்கி, செல்வத்தை தந்திடவும் ஓம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே பௌர்ணமி நாளில் மலை (கிரி) வலம் வருவோம். அண்ணாமலையாரின் அருள் பெறுவோம்.
திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.
பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத் தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங் கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.
மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில்
அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது.
அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.
மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி..
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும். ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.
"ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களான அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. 'அ' மற்றும் 'உ' எழுத்துக்கள் சேர்ந்து 'ஓ' என்று ஒலிக்கப்படுகிறது.
முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, "என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.
ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.
இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.
இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.
இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.
இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.
இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம்.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.
கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி
ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம். வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.
எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.