Monday, 16 December 2013

பொதிகை மலை உருகிய கதை

இலங்கை வேந்தன் ராவணனுக்கு ஓர் ஆசை.தேவர்கள் எனக்கு அடங்கி பயந்து நடக்கிறார்கள். பல அரக்கர்களை நான் வென்றிருக்கிறேன். என்றாலும் அருகில் உள்ள தமிழகம் மட்டும் என் ஆளுகைக்குள் வராமல் உள்ளது. எனவே தமிழகத்தை வென்று அதை நம் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆசை.உடனே அவன் தன் புஷ்பக விமானத்தில் தன்னுடைய சகாக்களுடன் பொதிகை மலைக்கு வந்தான். அங்கே அகத்திய முனிவரைச் சந்தித்தான். ராவணனின் நோக்கம் அகத்தியருக்குப் புரிந்துவிட்டது. தவவலிமையால் ஒப்புயர்வற்ற சிவபெருமானிடமிருந்து ஒப்பற்ற தமிழ்மொழியைப் பெற்ற அகத்திய முனிவருக்கு வணக்கம், என்றான் பணிவுடன். சிவனைக்குறித்து பலவகையான தவங்கள் இயற்றி, அதன் பயனாய் மூன்று கோடி வருடம் ஆயுளைப்பெற்ற ராவணன் என் இருப்பிடத்திற்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். வா! வா! என்று வரவேற்றார் அகத்தியர். ராவணன் தன் வருகையின் உள்நோக்கத்தை தானே வெளிப்படையாகச் சொல்லும்படி செய்தார் அகத்தியர்.  ராவணா! இலங்கையில் இருக்க வேண்டிய நீ தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதன் நோக்கம் என்னவோ? என்று கேட்டார் அகத்தியர்.முனிவர் பெருமானே! தமிழகத்தை என் ஆட்சிக்கு உட்படுத்த எண்ணியிருக்கிறேன். அதன்பொருட்டு நிலைமையை ஆராய வந்துள்ளேன் என்றான் ராவணன். ராவணா! நீ யாழ் இசைப்பதில் வல்லவன் அல்லவா? என்று கேட்டார் அகத்தியர். ஆம். பெரும் வல்லவன். அதிலென்ன சந்தேகம்? என்று ஆணவத்துடன் பதில் சொன்னான். அப்படியானால் நீ முதலில் என்னை யாழ் இசையில் வெல்ல வேண்டும். என்னை ஜெயித்தால் மட்டுமே, தமிழகத்தை வெற்றி கொள்ள நினைக்கும் உன் எண்ணம் ஈடேறும். இல்லாவிட்டால் உன் ஆசை நிறைவேறாது என்றார் அகத்தியர். அப்படியே ஆகட்டும். யாழ் இசைப்பதில் உங்களிடம் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டுகிறேன், என்றான் ராவணன்.

மலையே கரைந்தது அகத்தியருக்கும், ராவணனுக்கும் யாழ் இசை போட்டி நடைபெறப் போகிறது என்ற செய்தி எங்கும் பரவியது. ராவணன் யாழ் மீட்பதில் வல்லவன் என்பது அகிலம் அறிந்த ஒன்று. ஆனால், அகத்தியருக்கு யாழ் வாசிக்கத் தெரியும் என்பது இப்போதுதான் மக்கள் கேள்விப்பட்டார்கள். இசைப்போட்டிக்குரிய மேடை அமைக்கப்பட்டது. போட்டியைக்காண மக்கள் குழுமியிருந்தார்கள். போட்டி ஆரம்பமாயிற்று.  ராவணா! முதலில் நீ வாசிக்கிறாயா? அல்லது நான் வாசிக்கட்டுமா? என்றார் அகத்தியர். ராவணனுக்குத் தன் திறமையில் அதீத நம்பிக்கை இருந்தது. அகத்தியர் தோற்கப்போவது என்னவோ உறுதி. அப்படியிருக்க அவர்தான் முதலில் வாசிக்கட்டுமே என்று மனதிற்குள் நினைத்தவாறு, முதலில் நீங்களே வாசியுங்கள். தங்களது வாசிப்பில் மயங்கி என் உள்ளம் உருகிவிட்டால், நீங்களே வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்ளலாம், என்றான். ராவணா! உன் உள்ளம் உருகுகிறதா இல்லையயா? என்பதை வெளியில் இருப்பவர்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? இதோ பார், அனைவரும் பார்க்கும்படி இந்த பொதிகை மலையையே சிவனின் அருளால் யாழ் மீட்டி உருக வைக்கிறேன் என்றார் அகத்தியர். அக்ததியர் யாழை மீட்டினார். அவர் யாழை வாசிக்க, வாசிக்க பொதிகை மலை உருகியது. இதைக்கண்ட எல்லோரும் திகைப்படைந்தார்கள். ராவணன் வியப்படைந்தான். கல்லும் கரையும் அளவிற்கு ராவணன் யாழ் இசையைப் பழகவில்லை. ஆகவே வெட்கித் தலைகுனிந்தான். முனிவர் பெருமானே! நான் தோற்றுவிட்டேன். இந்த நாட்டை வெற்றி கொள்வது எளிதல்ல என்பதற்கு தாங்களும், தங்கள் இசையும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியபடி தலைபணிந்து வணங்கினான். அவனது கர்வம் அடங்கியது.

போகர் மகரிஷி

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.  மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.  அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.  சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!  அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.
                              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb9R7bzfBX2OUe8bOd9h6buXR_vpyU8oiCx6fxmw0iDqPokMuYHPwgtqsR4wq49Ne9yT7-rzJuMRZmMl7_DTcs-g27k325oocfxThctq2dC8LrJQjKfuHn8dDkf6Bx8geP7qK1MTs4ZSo/s320/bhogar+with+murugar.jpg

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.  ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.  ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.  உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.  பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.  உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.  மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.  தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.  இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.  பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.  பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.  இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.  போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.   துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.  இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள். ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.  இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..  ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?  இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?  இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.  இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.  இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.  அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.  சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.  அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.  அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.  தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.  போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.  மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.  அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.  அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.  சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.  போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.  அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

அருணகிரிநாதர் வரலாறு

அருணகிரிநாதர், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது, இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.

என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது.

அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான்.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTbW1FNQRN2XJrmTUCkbB9o1NBzV3eNch3sl5B8eW7KaQWYWjH2Jg

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காக்ஷி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள்.

அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி  அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. பேரொளி ஒன்று அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அருணகிரியார் காலி விழுந்து மன்னிப்பு கோரினான்.. சம்பந்தாண்டனை மன்னித்து விட்டு, மன்னனையும் சம்பந்தாண்டனை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

Sunday, 15 December 2013

நளதமயந்தி

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர்.

துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, “”உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “”இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள்.

 நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “”சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

நளன் கதை படிப்பவர்களுக்கு சனியினால் ஏற்படும் பாதிப்புக்கள் வெகுவாக குறையும் என்பது ஐதீகம்.